இந்திய பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு நேற்று (30) சென்ற இந்திய பிரதமர் ஆா்.எஸ்.எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவார் மற்றும் அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் அஸ்திக்கும் மரியாதை செலுத்தினார்.
மேலும் மாதவ் நேத்ராலயா கண் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றதாக சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கடந்த 10-11 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குச் செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது சென்றுள்ளார். அவருடைய ஓய்வு விண்ணப்பத்தை அளிக்க அவர் அங்கு சென்றிருக்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்த நாட்டின் தலைவரை மாற்ற விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியின் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ஜ.க.வும் அடுத்த தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.
அதன்படி அடுத்த பிரதமரை ஆர்.எஸ்.எஸ்தான் தேர்வு செய்யும். அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இது குறித்து விவாதிக்காகவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.