2.8 C
Scarborough

இணையவழி மோசடி; மியன்மாரில் மேலும் நால்வருக்கு மரண தண்டனை

Must read

மியன்மாரில் இணையவழி மோசடி மையங்களை நடத்தி வந்த மிக முக்கியமான ‘பாய்’ குடும்ப மாஃபியா கும்பலைச் சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

மோசடி, கொலை, திட்டமிட்ட தாக்குதல் மற்றும் பிற குற்றங்களுக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் இவர்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு சீன நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

கடந்த நவம்பர் மாதம், இந்தக் கும்பலின் தலைவர் பாய் சுவோசெங் (Bai Suocheng) உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் பாய் சுவோசெங் சிறையிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய நால்வருக்கு தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே போன்ற குற்றங்களுக்காக ‘மிங்’ (Ming) குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

மியன்மார் எல்லையில் உள்ள லௌக்கைங் (Laukkaing) பகுதியில் பாய் மற்றும் மிங் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சூதாட்ட விடுதிகள் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடத்தி வந்தனர்.

சுமார் 41 பிரம்மாண்ட வளாகங்களில் இணைய மோசடி மையங்களை இவர்கள் நடத்தி வந்தனர். அங்கு கடத்தி வரப்படுபவர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

இவர்களின் குற்றச்செயல்களால் 6 சீனக் குடிமக்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

மியன்மாரின் தற்போதைய ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கின் ஆதரவுடன் இந்தக் குடும்பம் லௌக்கைங் பகுதியில் அசுர வளர்ச்சி அடைந்தது.

மியன்மார் ராணுவம் இந்த மோசடி கும்பல்களைக் கட்டுப்படுத்தாததால் அதிருப்தியடைந்த சீனா, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்தது. இதன் விளைவாக, இந்த மாஃபியா கும்பல்கள் பிடிபட்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, தென்கிழக்கு ஆசியாவில் இது போன்ற இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கடத்தி வரப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் சிக்கி பல கோடி டொலர்களை மக்கள் இழந்து வருகின்றனர். இந்த மரண தண்டனைகள் மூலம், ஏனைய மோசடி கும்பல்களுக்கு சீனா ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article