17.6 C
Scarborough

ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேலிய பிரதமர் எச்சரிக்கை

Must read

ஹமாஸ் வசமுள்ள பணய கைதிகளை சனிக்கிழமைக்குள் விடுதலை செய்யவில்லையென்றால் காஸா மீது மீண்டும் தாக்குதலை தொடங்குவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பலஸ்தீனர்கள் 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காஸாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வரும் சனிக்கிழமை (15) அடுத்தகட்டமாக மேலும் 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் சனிக்கிழமை பணய கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை என்றால் காஸா நகரம் வெடிக்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் நெதன்யாகு தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில்,

ஹமாஸ் ஆயுதக்குழு வரும் சனிக்கிழமை மேலும் சில பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம். காஸாவில் மீண்டும் தாக்குதலைத் தொடங்க தயாராகும்படி பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

இதன் மூலம் வரும் சனிக்கிழமை இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் குழு விடுதலை செய்யவில்லையென்றால் காஸாவில் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article