சனிக்கிழமை மாலை வன்கூவரில் பிலிப்பைன் சமூகத்தினரின் கலாச்சார நிகழ்வொன்றின் போது நபர் ஒருவர் கூட்டத்திற்குள் காரை ஓட்டிச்சென்று 5 வயது சிறுவன் உட்பட 11 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது அதைவிட இன்னும் சிலர் அடையாளம் காணப்படவில்லை என்று துணைத் தலைமைப் பொலிஸ் அதிகாரி ஸடீவ் ரோய் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சந்தேகநபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபருக்கு மனநலம் சம்பந்தப்பட்ட நோய்நிலை வரலாறுகள் உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை பொதுமக்களால் சம்பந்தப்பட்ட நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபர் Adam Kai-Ji Lo என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏற்கெனவே இவரின் மீது இரண்டாம்நிலை கொலைக்குற்றச்சாட்டுகள் எட்டு சுமத்தப்பட்டுள்ளன. கிழக்கு 43வது ஒழுங்கை மற்றும் பிரேசர் ஒழுங்கை அருகே இரவு 8 மணிக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக வன்கூவர் பொலிஸார் கூறுகின்றனர்.
இது எங்கள் நகர வரலாற்றில் மிகவும் இருண்ட நாள் என்று பொலிஸ் அதிகாரி Rai வர்ணித்துள்ளார். இத்துயரம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் நடந்த அனர்த்தமே தவிர நகர பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது.
மிகவும் மோசமாக காயமடைந்தவர்கள் அம்யூலன்ஸ் மூலம் மெட்ரோ வன்கூவர் முழுவதும் உள்ள ஒன்பது வெவ்வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு இரவு முழுவதும் உழைத்த அனைத்து மருத்துவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஸ்டீவ் ரோய் கூறினார்.
இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் மார்க் கார்னி இது குறித்து தான் கேள்வியுற்றதும் அதிர்ச்சிக்குள்ளாகி மிகுந்த கவலையடைந்ததாகவும் துக்கத்தில் இருக்கும் அனைத்து கனேடியர்களுடனும் தானும் இணைவதாகவும் கூறியுள்ளார்.