மொன்றியலில் வாடகை வாகனச் சாரதியாகப் பணியாற்றும் முஸ்லிம் ஒருவர் கத்திமுனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனச் சாரதியின் மதத்தைக் கேட்டறிந்த பயணி ஒருவர் அவரது கழுத்தை அறுப்பதாகக் கூறி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் இம்மாதம் ஆறாம் திகதியன்று இரவு 11:45 மணியளவில் வில்-மேரி (Ville-Marie) பகுதியில் உள்ள ரூ செயிண்ட்-அந்தோணி (Rue Saint-Antoine) சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தை “இஸ்லாமிய வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட தாக்குதல்” என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) வன்மையாகக் கண்டித்துள்ளது.
மொன்றியல் காவல்துறையின் வெறுப்புக் குற்றப்பிரிவு (Hate Crimes Unit) தற்போது இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.

