கனடா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே அது குறித்து பிரதமர் மார்க் கார்னிக்கு அறிவிப்பு எதனையும் அனுப்பவில்லை என்று சிரேஷ்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கார்னிக்கு வேறு வழிகள் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதிலிருந்து பிரதமர் கார்னி, டிரம்புடன் பேசவில்லை என்றும் கார்னியுடன் பயணம் செய்த சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.
கனடா மீதான வரியை குறைக்க இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு இணங்கி இருந்த நிலையில் ஒன்ராறியோ மாகாண அரசு வெளியிட்ட விளம்பரத்தில் வரி விதிப்பினால் அமெரிக்கா பாதிக்கப்படலாம் மற்றும் போர் எழலாம் என தெரிவிக்கப்பட்ட காட்சிகள் அடங்கி இருந்ததால் ட்ரம்ப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தார்.
அத்துடன் 10 சதவீத வரியை அறிவித்ததோடு இந்த விளம்பரம் “உடனடியாக அகற்றப்பட வேண்டும்” என்று ட்ரூத் சோஷியலில் டிரம்ப் கூறினார், மேலும் அதை “மோசடி” என்று அழைத்தார், அத்துடன் இந்த வரி “அவர்கள் இப்போது செலுத்துவதை விட அதிகமாக இருக்கும்” என்றும் கூறினார்.
ஒன்ராறியோ அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் குறித்த விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியது, இது ஜனவரி இறுதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
டிரம்ப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்ததை அடுத்து, திங்களன்று அந்த விளம்பரத்தை நீக்குவதாக மாகாணம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் சனிக்கிழமை ஒரு சமூக ஊடகப் பதிவில், மத்திய அரசு வொஷிங்டனுடன் உரையாடலைப் பேணுவதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
“பிரதமர் நேற்று கூறியது போல, சமீபத்திய வாரங்களில் அமெரிக்க சகாக்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மேம்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று லெப்ளாங்க் மேலும் கூறியுள்ளார்.

