வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.
மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.