மின்னலே படத்தின் இசை வெளியீட்டு விழா 11.01.2001 அன்று நடைபெற்று 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு ரசிகப் பார்வை இது…
“ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்து… நான் பெரிய ரசிகன். அவர் இளையராஜா மற்றும் ரகுமானின் கலவை. அந்தப் பாடல் இப்ப வரைக்கும் என்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் வரிசையில் இருக்கு” – இதைச் சொன்னவர் ‘எந்திர’னில் வசீகரனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சொன்னது 2017 ‘காப்பான்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில். ரஜினி அப்படி ரசித்துக் கொண்டாடிய பாடல்தான் ‘வசீகரா’.
தமிழ்த் திரை இசையுலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விசேஷமான மூவர் கூட்டணி அமைவதுண்டு. ஸ்ரீதர் – எம்எஸ்வி – கண்ணதாசன், கே.பாலச்சந்தர் – எம்எஸ்வி – கண்ணதாசன், பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து, மணிரத்னம் – இளையராஜா – வாலி, மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் – வைரமுத்து, செல்வராகவன் – யுவன் – நா.முத்துக்குமார், ராம் – யுவன் – நா.முத்துக்குமார் போன்றவை வெவ்வேறு தலைமுறையினரின் சிறந்த உதாரணங்கள்.
அந்த வகையில் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் உருவான மற்றுமொரு வலுவான, பிரத்யேகமான கூட்டணி தான் கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கவிஞர் தாமரை. தமிழ் சினிமா பேசத் தொடங்கி 70 வருடம் கடந்த பின்னரே முதல் பெண் பாடலாசிரியர் கூட்டணி அமைந்தது. (தமிழ் சினிமாவின் முன்னோடியான பெண் பாடலாசிரியரான ரோஷனாரா பேகத்தின் ஒரே ஒரு பாடலான ‘குங்குமப் பொட்டின் மங்கலம் – குடியிருந்த கோயில்’ ஒரு விதிவிலக்கு).

