University of Toronto தனது பல் மருத்துவப் பீடத்தின் (Faculty of Dentistry) பீடாதிபதியான Anil Kishen மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அவர் தனது பாட விடயதானங்களில் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புச் சித்திரங்களைப் பயன்படுத்தியதாகக் எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணை முடிவடையும் வரை அவர் விடுப்பில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் படங்கள் யூத எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதைப் புரியாமலேயே தான் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ள Anil Kishen, இதற்காகத் தனது மாணவர்களிடமும் பீடத்திடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மேலும், அந்தப் படங்களை அவர் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளார்.
B’nai Brith Canada எனும் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த படங்களே இவ்வாறு சர்ச்சைக்கு காரணமாகியுள்ளன.
இஸ்ரேலியக் கொடியால் சுற்றப்பட்ட உருவம் மற்றும் பணக்குவியலில் இருக்கும் உருவங்கள் போன்ற சர்ச்சைக்குரிய சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
2009 முதல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவர், கடந்த ஆண்டு பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
sritamil.ca

