16.8 C
Scarborough

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Must read

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அறையொன்றில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் முதலாம் ஆண்டு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டுக்கமைய நடவடிக்கைகளை எடுக்காமல், முறைப்பாடு செய்த மாணவர்கள் உட்பட விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியே செல்லும் நேரம் முடிவடைந்த பின்னர் இரவு வேளையில் வீதி வழியாக வேறொரு வீடுதிக்கு அழைத்துச் சென்று, அறை ஒன்றில் வைத்துப் பூட்டிய பின்னர் அங்கு வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டதாகவும், மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவுமே மூன்று மாணவர்களும் தமது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிரூபத்துக்கமைவாகத் துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல், சட்டத்துக்கு மாறாக மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது முதல் விசாரணை நடைமுறைகள் உட்பட சட்டத்துக்கு முரணாகச் செய்யப்படும் விசாரணைகள் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், திரும்பத் திரும்ப முறைப்பாடு செய்யும் மாணவர்களுக்கெதிராகவே விசாரணைகள் மேறகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article