” யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது திஸ்ஸ விகாரை மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” திஸ்ஸ விகாரை பிரச்சினை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி இருந்தோம். அது தொடர்பில் கருத்துகளும் வெளியிடப்பட்டன. திஸ்ஸ விகாரையிலுள்ள தேரர்கள் மற்றும் கிராம மக்களுக்கு இது விடயத்தில் பிரச்சினை இல்லை.
எனினும், சில சிறிய அரசியல் குழுக்கள், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை தூண்டிவிட்டு மக்கள் குழப்புவதற்கு முற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
நாட்டில் எப்பாகத்தில் இருந்தாலும் ஆன்மீக தளங்கள் மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களை நாம் பாதுகாப்போம்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கு வழிபாட்டு தலங்களுக்கு சென்று, வழிபடுவதற்குரிய சுதந்திரம் உள்ளது. அதனை நாம் பாதுகாப்போம்.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.