16.7 C
Scarborough

மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன?

Must read

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ எச்சரித்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அந்தந்த மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் மூலம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தெற்கு மண்டல அணி துலிப் கோப்பைக்கான அணியில் ராகுல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், முகமது சிராஜ் போன்ற டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்யாமல் விட்டதுதான் பிசிசிஐ-யின் இந்தக் கண்டிப்புக்குக் காரணம். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஒரு மாத கால ஓய்வில் இருக்கின்றனர்.

பிசிசிஐயின் செயல்பாடுகள் தலைவர் அபய் குருவில்லா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு டெஸ்ட் வீரர்களை, மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார்.

“உள்நாட்டுத் தொடர்களின் பெருமையையும் தரத்தையும் தக்க வைக்க இங்கு இப்போது இருக்கும் இந்திய வீரர்களை அந்தந்த அணியில் தேர்வு செய்வது அவசியம். துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கிடைக்கக் கூடிய வீரர்களை தேர்வு செய்வது கட்டாயமாகும்” என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மாநில வாரியங்கள் தரப்புக் கூறுவதென்னவெனில் இந்திய வீரர்கள் ‘இந்தியா ஏ’ மற்றும் போர்டு பிரெசிடெண்ட் லெவன் அணிகளில் ஆடலாம், துலிப் கோப்பை, தியோதர் கோப்பைகளில் அவர்களைத் தேர்வு செய்யும் போது அதுவரை கடினமாக பயிற்சி செய்து உழைத்த ரஞ்சி வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் துலீப் கோப்பை சீசன் முழுதும் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கடந்த சீசனில் நன்றாக ஆடியவர்கள் தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று அதிருப்தி அடைகின்றனர் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம் என்கின்றனர்.

குருவில்லா, தன் கடிதத்தில், “ஒப்பந்த வீரர்களோ இல்லையோ இந்திய அணித் தேர்வுக்குத் தங்களை தயார் செய்து வரும் அனைத்து வீரர்களும் உள்நாட்டுத் தொடர்களில் ஆட வேண்டும். எந்த ஒரு அறிவிப்புமின்றி இருந்து கொண்டே தங்கள் மாநில அணிக்கோ, உள்நாட்டு தொடர் அணிக்கோ ஆடாமல் தவிர்க்கும் வீரர்கள் இந்திய அணித் தேர்விற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். தொடரில் ஆடவில்லை என்றால் முன்கூட்டியே அனுமதி பெற்று விடுப்பில் செல்ல வேண்டும். விடுப்பில் செல்வதற்கும் உகந்த காரணமே பரிசீலிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் தெற்கு மண்டலம், தன் அணியை இந்தக் கடிதத்திற்குப் பிறகேனும் மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article