மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் அது குறித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
மனிதபுதைகுழி அகழ்வு குறித்த நடவடினக்கைகளிற்கு பாதுகாப்பளிப்பதே பொலிஸாரின் கடமை தாங்களாகவே அகழ்வில் ஈடுபடுவதல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் பொலிஸார் மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியதில்லை அது நீதியமைச்சின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
நாங்கள் தேவையான பாதுகாப்பை மாத்திரம் வழங்குகின்றோம்,எனினும் மனிதபுதைகுழி குறித்து முறைப்பாடு காணப்பட்டால் பொலிஸார் அது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவித்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு உட்பட ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மனித புதைகுழிகுறித்து கருத்து தெரிவிக்கும் பலர் அதிகாரத்திலிருந்தவர்கள் அவர்களிற்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமிருந்தது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிலர் நீதியமைச்சர் பதவி போன்ற முக்கியமான பதவிகளை வகித்தனர் அவர்கள் இந்த விடயம் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருந்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.