சென்னை: தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட வருடங்கள் கழித்து இப்படத்தில் சுந்தர்.சி – வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது: “நானும் வடிவேல் அண்ணனும் மீண்டும் இணைந்து, உங்களை மகிழ்விக்க, உழைத்துள்ளோம். என் மீது இப்படத்திற்காக நம்பிக்கை வைத்த, ஏ.சி சண்முகம், ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் ‘மணி ஹெய்ஸ்ட்’ மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் கதாபாத்திரங்களை எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் இப்படத்தின் கதை.
இந்தப்படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் அண்ணன் போகிறபோக்கில் ‘கேங்கர்ஸ்’ என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்” இவ்வாறு சுந்தர். சி பேசினார்.