12.9 C
Scarborough

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

Must read

காஸா நகரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனர்களை முதற்கட்டமாக விடுவிப்பதில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு உடன்பாடில்லை எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், ஜன.19 திகதிக்குள் இஸ்ரேல் காஸா பகுதியின் மீது நடத்திவரும் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் உலகளவிலுள்ள அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று (ஜன.15) இரவு அந்த கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளுக்கும் முகாம்களுக்கும் திரும்பியபோது இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது.

வடக்கு காஸா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 65 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் இந்த தாக்குதல்களில் மொத்தம் 82 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த தொடர் தாக்குதல்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.1 திகதியன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் படி இஸ்ரேல் சிறைகளில் குறைந்தபட்சம் 10,221 பாலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதில் இஸ்ரேல் ராணுவத்தினால் போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article