7.8 C
Scarborough

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற அரசு திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் – சஜித்

Must read

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க எடுத்த தீர்மானம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவிலோ முற்றுலுமோ பயன்படுத்தப்படாத காணிகளில் பயிரிடுவதற்கான உரிமையை வழங்கி, அந்த மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான தேசிய திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட சமூகத்திற்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை குறித்து தவறான கருத்து நிலவும் தருணத்தில் இந்த விடயம் தொடர்பாக இன்று (14) பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய முற்பட்டபோது, கருத்து தெரிவிக்க சபாநாயகர் இடமளிக்காத காரணத்தால், பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மேற்கண்ட கருத்தினை அவர் முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் தற்போதைய 1350 ரூபாய் சம்பளத்துடன் 400 ரூபாய் அதிகரிப்பை இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் 200 ரூபாவையும், அரசாங்கம் 200 ரூபாவையும் செலுத்தும் தீர்மானத்துக்கு வந்துள்ளது.

துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த 400 ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். இதை விட அதிக ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பெருந்தோட்ட சமூகத்தினருக்கான சம்பளத்தை அதிகரிக்கும் விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட சமூகத்துக்கு சம்பளம் கிடைத்தால், அது ஒரு நல்ல விடயமாகும். அவ்வாறே இது சாதகமான விடயமுமாக அமைந்து காணப்படுகின்றன. அரசாங்கத்தால் இவ்வாறு நிதிகளை ஒதுக்க முடியும்.

கொவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டபோது, வீழ்ச்சி கண்ட தொழிற்றுறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்தன. இவ்வாறு நிதிகளை ஒதுக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதால் மாத்திரமல்லாது, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும், முற்றுலுமே பயன்படுத்தப்படாத காணிகளில் பயிரிடுவதற்கான உரிமையை வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான தேசிய திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் பெருந்தோட்ட சமூகத்தை வலுப்படுத்த முடியும்.

இன்று, தோட்டத் துறையில் 60 – 70% காணி உரிமைகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக காணப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியில் இத்தரப்பு 30%ஐ விடவும் குறைவான பங்களிப்பை மாத்திரமே பெற்றுத் தருகிறது. மறுபுறம், 30% காணி உரிமைகளை கொண்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், நாட்டின் தேயிலை உற்பத்தியில் 60-70%ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர். பயிரிடப்படாத காணிகள் அரசு மற்றும் கம்பனிகளிடம் காணப்படுவதால், இவற்றை வேலையில்லாத இளைஞர்களுக்கும், தோட்ட சமூகத்தினருக்கும் பிரித்து வழங்கி, அவர்களுக்கு காணி உரிமைகளை வழங்கி, தேயிலை உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன், மேலும் ரூ.400 அதிகரிப்பதை நான் எதிர்க்கவில்லை. எதிர்க்கப்போவதுமில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் ரூ.400 செயல்படுத்தப்படுவதே விரும்பத்தக்கது.

பயிரிடப்படாத, பயன்படுத்தப்படாத தரிசு காணிகளை இந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து, செய்கைகளுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொடுங்கள், இவ்வாறு செய்தால், தமது சொந்தக் காணியில், அவர்களுக்கென சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் நிலைப்பாடு இதுவாகவே அமைந்து காணப்படுகின்றன. இரு ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில் (விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும். இதுதான் எமது செல்லுபடியான கொள்கை. எனவே, இது தொடர்பான ஏனைய கருத்துக்களை புறந்தள்ளி வைத்துவிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையை சமூகமயப்படுத்துவது நமது கடமையாகும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலேனும் பாராளுமன்றத்தில் விசேட கருத்தை முன்வைக்க இன்று எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்த நிலைக்கு நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article