பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் பொல்சனாரோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் பொல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் 3 மாதம் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே அடுத்த வாரம் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் முன்னதாகவே கைது செய்த போலீசார் பிரேசிலியாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு பொல்சனாரோவை அழைத்து சென்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.