பிரிவினைவாதத்திற்கு எதிராகவே தாய்வானுக்கு அருகில் இராணுவ பயிற்சி முன்னெடுக்கபட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-டே தொடர்ந்தும் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வருகிறார். அதற்கு எதிராகவே இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் சீனாவின் தாய்வான் விவகார அலுவலகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில், லாய் சிங்-டே நிர்வாகம் நெருப்புடன் விளையாடத் துணிந்தால், அது அழிவை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜே -10 ஜெட் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உட்பட 54 சீன யுத்த விமானங்கள் தாய்வானுக்கு அருகில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவை தாய்வானின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு மற்றும் கிழக்கு வான்பரப்பில் பிரவேசித்ததாகவும் தைப்பே பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டதைத் தொடர்ந்தே சீனா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு 7-10 நாட்களுக்கு ஒரு தடவை தாய்வானை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய போர்ப் பயிற்சிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும் தாய்வான் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.