பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதனுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
தெலுங்கில் ‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் நாகார்ஜுனா. இதில் பிரதீப் ரங்கநாதனிடம் பேசும் போது நாகார்ஜுனா, “பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சினிமாவில் அறிமுகமாகி விதியை மாற்றினார். அவர் ரஜினிகாந்த். சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவர் வந்து சில முறைகளை மாற்றினார். அவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து உங்களிடம் அதனைக் காண்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
நாகார்ஜுனாவின் பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த பிரதீப், “உங்களிடம் இருந்து வரும் இந்த பெரிய வார்த்தைகள் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். பின்பு மமிதா பைஜுவுடன் இணைந்து படம் குறித்து பல்வேறு விஷயங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். நாகார்ஜுனாவின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக நிக்கித் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

