France அதிபர் Emmanuel Macron உடன் இன்று பேசிய பிரதமர் Mark Carney, G7 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025-ஆம் ஆண்டில் கனடாவின் G7 தலைமைப் பொறுப்பை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக Carney க்கு Macron வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கனடாவின் தலைமையின் கீழ் எட்டப்பட்ட G7 அமைப்பின் முக்கிய சாதனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதில் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மீள்திறன் கொண்ட உலகப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற கூட்டு முயற்சிகளும் அடங்கும்.
France இன் 2026-ஆம் ஆண்டு G7 தலைமைப் பொறுப்பில் வரவிருக்கும் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், அதிக நிச்சயமற்ற தன்மையும் பிளவுகளும் கொண்ட இந்த உலகில் இக்கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், முக்கியமான கனிய வளங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சர்வதேச பங்காளிகளுடன் நடைமுறைக்கு ஏற்ற வகையில் இணைந்து செயற்படவும் இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
கனடா கடந்த June மாதம் Alberta வில் உள்ள Kananaskis இல் G7 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்தியது. அத்துடன், முக்கிய துறைகளைச் சார்ந்த G7 அமைச்சர்களுடன் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான கூட்டங்களையும் நடத்தியது.

