தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்துக்காக அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சினிமாவில் நடித்து வரும் பாலகிருஷ்ணா மறுபுறம் ஆந்திராவின் இந்துபூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ”வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பிடித்திருக்கிறது. பாலகிருஷ்ணா சினிமாவில் அறிமுகமாகி 50 வருடங்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார்.
‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள புதிய படத்திற்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளது. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களில் பாலகிருஷ்ணா – நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindu Tamil

