11.2 C
Scarborough

பகல் கனவாய் போனது இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு!

Must read

ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இலங்கை அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

மேலும் இந்த தோல்வியுடன் சுப்பர் 8 சுற்றில் இரண்டு தொடர் தோல்விகளுடன் இலங்கை அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி செல்லும் வாய்ப்பினையும் இழந்துள்ளது.

முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதான்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க, முதலில் பந்துவீச்சினைத் தெரிவு செய்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுக்கு அமைய முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 84 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதும் மிச்சல் சாண்ட்னர் மற்றும் கோலே மெக்கொன்ச்சி ஆகியோரது போராட்ட ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து சார்பாக மிச்சல் சாண்ட்னர் 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிக்ள அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் கோலே மெக்கொன்ச்சி 31 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஸ் தீக்ஷன மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

பின்னர் 169 ஓட்டங்கள் என்கிற சவாலான வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இலங்கை அணியானது நியூசிலாந்தின் சுழல்பந்துவீச்சாளர்களின் அழுத்தம் காரணமாக ஓட்டங்கள் பெறுவதில் தடுமாறியதோடு விக்கெட்டுக்களையும் குறுகிய இடைவெளிகளில் இழந்தது.

இறுதியில் இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்கள் பெற, துனித் வெல்லாலகே 29 ஓட்டங்கள் பெற்றார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் ரச்சின் ரவிந்திரா 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மேட் ஹென்ரி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ரச்சின் ரவீந்திரா தெரிவாகினார். இலங்கை அணி அடுத்ததாக இந்த T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை 28ஆம் திகதி எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article