நேபாளத்தில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா இரத்து செய்துள்ளதாக நேற்று (8) தெரிவித்துள்ளது.
தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து என்பது, போர் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சில நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு சிறப்பு அனுமதியாகும்.
வீடு திரும்புவது அவா்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதன் அடிப்படையில், அவா்கள் அமெரிக்காவில் சட்டபூா்வமாக 18 மாதங்கள் தங்கி வேலை செய்ய இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து அனுமதிக்கிறது.
நேபாளத்துக்கு வழங்கப்பட்ட இந்த அந்தஸ்தை கடந்த 2016-ஆம் ஆண்டு கூடுதலாக 18 மாத காலத்திற்கும், அதன் பிறகு பல முறையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நீடித்தது.
இந்நிலையில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாளத்தின் நிலைமை தற்போது சீராக உள்ளது. எனவே, அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை 2025, ஜூன் 24-ஆம் திகதியுடன் இரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து விதிகளின் கீழ், அமெரிக்காவில் உள்ள நேபாள மக்கள் ஆகஸ்ட் 5-ஆம் திகதிக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப கெடு விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து அனுமதியின் கீழ் அமெரிக்காவில் சுமார் 12,700 நேபாள மக்கள் வசித்து வருகின்றனா். இதில் 5,500க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளனா். என்பதும் குறிப்பிடத்தக்கது.