“தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன், விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும்.”
இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க தலைமையில் கூடியது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தின்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மருத்துவமனையின் அதிகாரிகள் அதன் தற்போதைய நிலை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர்.
மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை உட்பட, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஊழியர்களுக்கான தேவை இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர்.
இதன்போத கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க,
“ இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருக்கின்றன.
தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும் என நம்புகின்றேன்.” எனக் குறிப்பிட்டார்.
ஊழியர்களை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உள்ளகக் கணக்காய்வாளரை நியமித்து வைத்தியசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட அதன் செயல்திறனை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டியதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

