சீனா உள்ளிட்ட பல்வேறுநாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் அமெரிக்கா வரிவிதித்துள்ள சூழலில், ”வரிப் போரில் யாரும் வெற்றியாளர்கள் இல்லை,” என, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் பொருட்களுக்கு, 145 சதவீதம் வரி விதித்ததையடுத்து இந்த மிரட்டலுக்கு அடிபணியாத சீனா, அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
அனைத்து நாடுகளின் மீது பிறப்பிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா, சீனா மீதான வரி விதிப்பை மட்டும் அமுல்படுத்தியுள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப் போரை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், வர்த்தகத்தை பெருக்கும் விதமாகவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், மலேஷியா, கம்போடியாவிற்கு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக நேற்று (15) வியட்நாம் சென்ற அவர், அந்நாட்டு பிரதமர் பாம் மின் சின்னை சந்தித்து பேசினார்.
வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். பின், ஷீ ஜின்பிங்- பாம் மின் சின்இருவரும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், ‘இரு நாடுகளும் பலதரப்பு வர்த்தக அமைப்பு, நிலையான உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகள் மற்றும் சர்வதேச சூழலை உறுதியாக பாதுகாக்க வேண்டும்’ என, தெரிவித்தனர்.
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், தன் கருத்தாக, ”வரிப்போரில் யாரும் வெற்றியாளர்கள் இல்லை,” என, தெரிவித்தார்.
இதையடுத்து, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டோ லாம் உள்ளிட்டோரை ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினார். வியட்நாமை தொடர்ந்து மலேஷியா, கம்போடியா நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளார்.
ஷீ ஜின்பிங்கின் இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்கா வரி விதிப்பு பிரச்னைக்கு பின், இந்த பயணம் மிகவும் முக்கியம்வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.