வடக்கு, கிழக்கில் மனித புதைகுழிகள் உருவாவதற்கு இந்த ஜனாதிபதித்துவ ஆட்சிமுறைமையும் ஓர் காரணமாகும். எனவே, இம்முறையை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜே.ஆர். ஜயவர்தனவே ஜனாதிபதித்துவமுறை ஆட்சியைக் கொண்டுவந்தார். அந்த முறைமை வந்து அடுத்த வருடமே மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டுவரப்பட்டது. இச்சட்டமானது அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்கியது. அதேபோல குற்றவாளிகள் தப்பிக்கவும் வழிவகுத்தது.
எனவே, ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதைவிட இந்த ஜனாதிபதிபதித்துவ ஆட்சிமுறைமையே நாட்டில் இருக்ககூடாது. இதுவே மேலானதாகக் கருதப்படும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏனெனில் இந்த ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கடந்தகாலங்களில் படு பயங்கரமான செயல்களைச் செய்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு ஒரு சமூகம் அழிக்கப்பட்டது. ஜே.வி.பியினர்கூட அச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நாம் மண்ணை தோண்டும்போது எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுகின்றன. செம்மணியில் பல எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தகாலத்தில்தான் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
வடக்கில் மாத்திரம் அல்ல கிழக்கிலும் பல புதைகுழிகள் உருவாக்கப்பட்டன. மனித எலும்புக்கூடுகள் மட்டும் அல்ல மண்ணுக்குள் இருந்து தற்போது போதைப்பொருளும் எடுக்கப்படுகின்றது.
இதற்கெல்லாம் இந்த ஜனாதிபதித்துவ ஆட்சிமுறைதான் பொறுப்புகூறவேண்டும். அந்த ஆட்சிமுறையை அரசமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்.” – எனவும் ஸ்ரீநேசன் எம்.பி. குறிப்பிட்டார்.