அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள உயரதிகாரிகள் கிரீன்லாந்துக்கு விரைவில் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களது விஜயத்திற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் பிரதமர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கிரீன்லாந்து செல்லவிருக்கும் உயரதிகாரிகள் குழுவில் அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட்,
‘கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு என்ன வேலை? எங்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதே அவர்களது நோக்கம். இது அராஜகம். அந்த நாட்டின் அரசியல் தலைவரின் மனைவி உஷா வான்ஸ் இங்கு என்ன செய்ய போகிறார்? என்று கேள்வி எழுப்பி கண்டித்துள்ளார்.
இவர்களது கிரீன்லாந்து விஜயத்தை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சனும் கண்டித்திருக்கிறார்.
தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு இருக்கக்கூடாது என்று கிரீன்லாந்தும் டென்மார்க்கும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வௌ்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரீன்லாந்தின் பாரம்பரியத்தை உஷா வான்ஸ் அறிந்துகொள்ள இருப்பதாகவும் அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அவர் பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.