அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பிற்காக (யு.எஸ்.எய்ட்) வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு வொஷிங்டன் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உலக நாடுகளுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்க அரசு யு.எஸ்.எய்ட் அமைப்பை கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த அமைப்பிற்கு தனது பட்ஜெட்டில் ஆண்டுதோறும் அமெரிக்கா நிதி ஒதுக்குகிறது.
அந்த நிதியின் மூலம் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பலன் அடைகின்றன. ஆனால் இந்த நிதியுதவி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும், தவறான நோக்கங்களுக்கு செலவிடப்படுவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி நிதி உதவியை நிறுத்தியுள்ளது.
மேலும், எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் குழு யு.எஸ்.எய்ட்டை முழுமையாக மூட பரிந்துரைத்தது. அதற்கு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.
அதன் ஒரு கட்டமாக யு.எஸ்.எய்ட் அமைப்பிற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாக விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அமெரிக்கா திரும்ப வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முழு செலவு அரசு தரப்பில் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து யு.எஸ்.எய்ட் ஊழியர்கள் தரப்பில் வொஷிங்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிக்கோலஸ், நிர்வாக விடுமுறை மற்றும் 30 நாள் கெடு உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், யு.எஸ்.எய்ட் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திய ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த 2 உத்தரவாலும் வெளிநாடுகளில் பணியாற்றும் சுமார் 2,200 ஊழியர்களை ட்ரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது