17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (10-ந்தேதி) ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதல் 14-ந்தேதி அரங்கேறுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே மற்றும் அக்சர் படேல் போன்ற ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன் சினிமாவில் செய்ததை விராட் கோலி கிரிக்கெட்டில்..- சஞ்சய் பங்கர் பாராட்டு
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஷிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்கள் 4 ஓவர்கள் பந்துவீசுவது முக்கியம் என்று இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “என்னை பொறுத்தவரை ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டர்கள் டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்கள் முழுமையாக பந்து வீச வேண்டியது முக்கியம். அதனால்தான் எப்போதும் அவர்களிடம் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்து கடினமாக உழைக்கும்படி அறிவுறுத்துகிறேன். ஆல்ரவுண்டர்கள் இரு திறமைகளிலும் கடுமையாக உழைக்க வேண்டும். சில நேரம், அவர்கள் பயிற்சியின்போது குறும்புத்தனமாக ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். இது போன்ற சூழலில் முடிந்த வரை அதை சரி செய்ய முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.