அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பொருட்களை பிற நாடுகளில் இறக்குமதி செய்யும் போது அப் பொருட்களுக்கு அவர்கள் விதிக்கும் வரிக்கு இணையான வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.அதேவேளை , கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடா இணைக்கப்படும் என்று தொடர்ந்து ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர்களின் உரையாடல் குறித்து ட்ரம்ப் கூறியதாவது :
“கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் என்னை தொடர்புகொண்டு வரி உயர்வு குறித்து தொலைபேசியில் உரையாடினார். கனடா மற்றும் மெக்சிக்கோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வந்த போதைப் பொருட்களால் பலர் உயிரிழந்ததை அவரிடம் சொன்னேன். தற்போது போதைப் பொருள் ஊடுருவல் நிறுத்தப்பட்டதாக அவர் கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பிரதமர் தேர்தல் எப்போது நடைபெறவுள்ளது என்பதை அவரால் என்னிடம் கூறமுடியவில்லை. கனடாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. அதன்பிறகுதான் வர்த்தகப் போரை பதவியில் நீடிக்க பயன்படுத்த விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன்” என கூறினார்.
மற்றுமொரு பதிவில் ட்ரம்ப் ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் ஜஸ்டின் எனக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறியுள்ளார் .
“அவரது பலவீனமான எல்லைக் கொள்கையால் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதமாக மக்கள் ஊடுருவல்தான் பெரும்பாலான பிரச்னைக்கு காரணம் என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமரை தொடர்ந்து ஆளுநர் என்று ட்ரம்ப் அழைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.