செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டம், இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
அதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இதனை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர், வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் , செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.