சுவிட்சர்லாந்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸின், லங்காஸ்ஸில் கடந்த சனிக்கிழமை ( 9), நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் 40 வயது இத்தாலிய குடியுரிமை கொண்ட இலங்கை நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவு 12:45 மணியளவில், அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து லங்காஸ்ஸில் உடல் ரீதியான தகராறு நடப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்நாட்டு காவல்துறை ரோந்துப் படையினர் வந்து, வெட்டுக்களுடன் படுகாயமடைந்த இருவரைக் கண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 40 வயது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டார்.
இருவரும் செயிண்ட் கேலன் மாகாணத்தில் வசிக்கின்றனர். உயிரிழந்தவர் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்டவர். சுவிஸில் சில தசாப்தங்களின் முன்னர் தமிழர்கள் மத்தியில் இயங்கிய பாம்பு குழு என்ற ரௌடி குழுவில் அங்கம் வகித்தவர் என சுவிஸ்வாழ் தமிழர்கள் கூறுகிறார்கள்.
கைதானவர் கண்டியை சேர்ந்த முஸ்லீம் நபர் என்றும் அவர் இத்தாலிய பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நள்ளிரவில், அரங்கேறிய இச்சம்பவம் சுவிஸ் வாழ் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .