யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று குழுவினால் வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டமையினால் அவர்களுடைய தடைகளை நீக்குவதற்குப் பல்கலைக்கழக பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பதவியிலிருந்து பேராசிரியர் ரகுராம் விலகியிருந்தார்.
அவர் பதவி விலகிய விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்பட வேண்டும் எனக் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தரை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு வினவியபோது, பேராசிரியர் ரகுராமின் பதவி விலகல் கடிதத்தை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.