காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு பிரான்செஸ்கா அல்பனீஸ் அளித்த அறிக்கை, காஸாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.
காஸாவில் முற்றிலுமாக சிதைந்த நிலையிலும், இஸ்ரேலின் இனப்படுகொலை பெருநிறுவனங்களுக்கு இலாபகரமானது என்பதால் தொடர்கிறது என பிரான்செஸ்கா அறிக்கை விளக்குகிறது .
‘ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனப் பிரதேசங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன பங்காளிகளின் ஈடுபாட்டையும், பொருட்களை விற்பனை செய்யும் விவசாய நிறுவனங்களையும், போருக்கு நிதியளிக்கும் முதலீட்டு நிறுவனங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதே வேளையில், ஏராளமான பெருநிறுவனங்கள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை ஆகியவற்றால் இலாபம் ஈட்டியுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
2022 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளராக இருக்கும் இத்தாலிய சட்ட அறிஞரான பிரான்செஸ்கா அல்பானீஸ், காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலை ஒரு ‘இனப்படுகொலை’ என்று ஜனவரி 2024 இல் முதன்முதலில் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.