உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் ‘ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்” என்ற தேசிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நான் பெற்றுக் கொண்டது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கானாவுக்கு சென்ற பிரதமர் மோடியை, அக்காராவில் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு ஜனாதிபதி மஹாமா வரவேற்று அழைத்து சென்றார்.
அங்கு மோடியை கௌரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 3 தசாப்தத்தில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் மோடியை பார்க்க, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடினர். அவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கானா நாட்டின் ஜனாதிபதி மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.