சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் கலந்து கொண்டார். அதன் பின்னர் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து வெளியான ‘டாடா’ திரைப்படமும் வெற்றி பெற்றது. ஆனால் ‘பிளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு “கிஸ்” என டைட்டில் வைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் “கிஸ்” படத்தின் முன்னோட்டம் வரும் 14 ஆம் திகதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.