0.9 C
Scarborough

கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – பிரதமர் உறுதி

Must read

இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 05 முக்கிய துறைகளின் கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ 2026ஆம் ஆண்டு பாதீட்டில் இதற்கென 24,986 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெரும் பகுதி, அதாவது 17,542 மில்லியன் ரூபா பாடசாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படவுள்ளது.

ஏனைய நிதியானது பாடத்திட்ட மேம்பாட்டிற்கு 6,084 மில்லியன் ரூபா, மனிதவள மேம்பாட்டிற்கு 1,026 மில்லியன் ரூபா, மதிப்பீட்டு முறைகளை நவீனமயப்படுத்த 298 மில்லியன் ரூபா மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு 36 மில்லியன் ரூபா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இதுவரை நடைமுறையிலிருந்த பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்ட மற்றும் பாடங்களை மனப்பாடம் செய்யும் முறைக்கு இந்த மறுசீரமைப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது.

ஒரு கருவியைப் பற்றிப் புத்தகத்தில் படித்து அதன் பாகங்களை மனப்பாடம் செய்வதை விட, அந்த கருவியை நேரடியாக இயக்கிப் பழகும் நடைமுறைத் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காகப் புதிய பாட அலகுகள் மற்றும் நவீன வகுப்பறைச் செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்தநிலையில், புதிய பாடத்திட்டங்கள் 2026ஆம் கல்வியாண்டில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி, தரம் 6 மாணவர்களுக்கு ஜனவரி 21 ஆம் திகதியிலிருந்தும், தரம் 1 மாணவர்களுக்கு ஜனவரி 29 ஆம் திகதியிலிருந்தும் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளளது.

இவற்றுக்கு இணையாக, மாணவர்கள் புதிய பாடங்களைத் தெரிவு செய்தல் மற்றும் புதிய முறைமைக்கு அவர்களைத் தயார்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுத் திட்டங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் 132,580 ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன

இதற்காக 7,181 ஆசிரியர் பயிற்றுவிப்பு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு பயிற்சிகள் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article