கனடா டர்ஹாம் பிராந்திய பொலிசார் பாதுகாப்பு வழக்கறிஞரான சுடின் ரைலியை எந்த கேள்விகளும் இன்றி தலையை மேசையில் பலமுறை மோதி தாக்கியதாகவும், தலையணி (head scarf) யைப் பிடுங்கி அகற்றியதாகவும், ஓஷாவா நீதிமன்றத்தின் அடித்தள சிறை அறைகளுக்குக் கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் மற்றுமொரு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு வழக்கறிஞர் சுடின் ரைலி இரத்தக் காயங்களுடன், உடல் வீக்கத்துடன் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
அவரது வழக்கறிஞர் நேஹா சக் வெளியிட்ட அறிக்கையின் படி, பாதுகாப்பு வழக்கறிஞரான சுடின் ரைலி வெள்ளிக்கிழமை மாலை தாமதமாக ஒரு வழக்கை முடித்த பின், ஒரு நேர்காணல் அறையில் சட்டப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது சீருடை அணிந்த பொலிசார் அந்த அறையில் அவருடன் உரையாடியதாகக் கூறப்படுகின்றது.
சக்கின் அறிக்கையில், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிசார் ரைலியின் தலையை மேசையில் மோதியதுடன், அவரது முதுகிலும் கழுத்திலும் முழங்கால்களை வைத்ததாகவும்அத்துடன் வழக்கறிஞரை அவமதித்தும் தூற்றியும் பேசினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கைப்பிடிகள் அணிவித்து, ரைலியை அந்த அறையிலிருந்து வலுக்கட்டாயமாக “இழுத்துச்” சென்று, நீதிமன்றத்தின் அடித்தள சிறை அறைகளுக்குக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
“நீதிக்கான தேடலில் முழுமையாக ஈடுபட்ட ஒரு கறுப்பின பெண் வழக்கறிஞராக இருந்ததைத்தவிர அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை.” என தாககப்பட்ட வழக்கறிஞர் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓஷாவா நீதிமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிசார் சேவை (DRPS) உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிசார் அறிக்கையில், DRPS சார்ஜெண்ட் ஜெனலின் டவுடில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் பெறவும் ஆய்வு செய்யவும் நீதிமன்ற சேவைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளப்படுகின்றன,” என்றும்’ “சூழ்நிலைகளை முழுமையாக புரிந்து கொள்ளவும், தேவையான அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்மானிக்கவும், பொலிசார் பொருத்தமான விசாரணைகளைச் செய்வார்கள் எனவும் பொலிஸ் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

