தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்ததன் அடிப்படையில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை கனடா முதல்வர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்காவின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கெதிராக கனேடியர்களைப் பாதுகாப்பது, தொழிலாளர்களை ஆதரிப்பது மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகியவை பிரதமரின் பிரதான கொள்கைகளாக இருக்கும். இதனடிப்படையிலேயே முதல்வர்களுடனான சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளதாக மார்க் கார்னியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஆட்ரி சாம்பூக்ஸ் தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் பிரதமர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவார் என பரவலாக நம்பப்படும் நிலையில் பிரதமருக்கும் முதல்வர்களுக்குமிடையிலான சந்திப்பு நடைபெறுகின்றது. இச்சந்திப்பில் கனடாவின் 13 பொருளாதாரத்திற்கு பதிலாக ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு எவ்வாறு கூட்டாகச் செயற்படுவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இதுவரை அவருடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாத கார்னி, கட்டண அச்சுறுத்தல்களைக் கையாண்டு வரும் அமைச்சர்களின் முக்கிய குழுவை ஒன்றாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் மார்ச் 09 ஆந் திகதி லிபரல் தலைமைத்துவத்தை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர் அவர் கடமைக்கு திரும்பி சில நாட்களே கடந்துள்ள நிலையில் அவரது கொள்கைகள் குறித்து உலகளவில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.