கனடாவில் Greater Toronto Hamilton (GTHA) பகுதியில் புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் சந்தைப் பெறுமதி ஒவ்வொரு ஆண்டும் 60 சதவீதத்திற்கும் மேல்குறைந்து தற்போது 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகக் குறைந்த காலாண்டு தொகையை எட்டியுள்ளதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இம்மாத தொடக்கத்தில் நகரமயமாக்கல் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான முதற்காலாண்டின் தொடர்மாடிக் குடியிருப்பு சந்தை நிலவரத்தின் படி புதிய GTHA விற்பனை கடந்த 10 ஆண்டு சராசரியை விட 88 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
215 புதிய தொடர்மாடிக்குடியிருப்புக்களே விற்பனையாகின. இதனடிப்படையில் Toronto வில் 1990 க்குப் பின்னர் மிகக் குறைந்த முதல் காலாண்டு மொத்த விற்பனை பதிவாகியது. இது அமெரிக்காவுடனான வர்த்தக மோதலால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் செலவு அதிகரிப்புகளால் ஏற்பட்டது என்று Urbanation தலைவர் Shaun Hildebrand தெரிவித்தார்.
இத்தகைய பாரிய சரிவின் காரணமாக நூற்றுக்கணக்கான புதிய தொடர்மாடிக்குடியிருப்புகளுக்கான திட்டங்கள் கிடப்பில் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்கப்படாத புதிய தொடர்மாடிக்குடியிருப்புக்கள் மொத்தம் 23,918 அலகுகளாகும். இது ஆறு சதவீத அதிகரிப்பு என்பதுடன் கிட்டத்தட்ட 78 மாத விற்பனைக்கு சமமானது.
வீட்டு வசதியில் டொரண்ரோ அண்ணளவாக அரைவாசிக்கும் மேற்பட்ட அளவு தொடர்மாடிக்குடியிருப்பிலேயே தங்கியுள்ளது. இத்தகைய மந்த நிலையினால் விநியோக விளைவு கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.
எனவே மார்ச் மாதத்தில் பொருளாதார நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் வீட்டுவசதியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஆயிரக்கணக்கான தொடர்மாடிக்குடியிருப்புகளுக்குரிய மேம்பாட்டு கட்டணங்களை உள்ளூராட்சி மன்றம் ஒத்திவைக்க வேண்டும் என்று நகர ஊழியர்கள் பரிந்துரைத்தனர்.