கனடாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக இரத்தத்திற்கான தேவையும் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய நன்கொடையாளர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கனேடிய இரத்த சேவைகளின் [Canadian Blood Services] தலைமை நிறைவேற்று அதிகாரி டாக்டர் கிரஹாம் ஷெர் தெரிவித்துள்ளார்.
ஒன்ரோறியோவின் வெகுஹானில் வசித்து வரும் 40 வயதுடைய மார்க் பர்வானோ இதுவரை 146 முறை இரத்த தானம் செய்துள்ளார். தனது 17 வயது தொடக்கம் இரத்ததானம் செய்து வரும் இவர் மற்றவர்களுக்கு உதவுவதால் தனக்கு ஒரு சாதனை உணர்வும் வெகுமதியும் கிடைக்கிறது என்று பெருமையாக கூறுகின்றார்.
கனேடிய இரத்த சேவைகளின் [Canadian Blood Services] தரவுகளின் படி இரத்தம் மற்றும் plasma ஐ தானம் செய்யும் தகுதியுள்ள இரண்டு சதவீத கனேடியர்களில் மார்க் பர்வானோவும் ஒருவர். அண்மைய கணக்கெடுப்பிற்கமைய 71 சதவீத மக்கள் இதனை மக்கள் தங்களது சமூகத்திற்குத் திருப்பித் தரக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள வழிகளில் ஒன்று என ஒப்புக்கொள்வதாக நிறுவனம் கூறுகிறது.
இரத்தம் மற்றும் plasma விற்கான தேவை அதிகரித்து வருவதாக கனேடிய இரத்த சேவைகளின் தலைமை நிறைவேற்று அதிகாரி டாக்டர் கிரஹாம் ஷெர் தெரிவித்துள்ளார். இத்தேவையை பூர்த்தி செய்ய தற்போதுள்ள 420,000 நன்கொடையாளர்கள் போதாது என்றும் அவர் கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் plasma விற்கான தேவை குறைந்தது 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இரத்த தானம் செய்யும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, முடிந்தவரை அதிகமான நன்கொடையாளர்களை இணைப்பதற்கு இரத்த சேவை நிறுவனம் பல உத்திகளைக் கையாண்டு வருவதாக கிரஹாம் ஷெர் கூறினார்.