அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (10) தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென வரிவிதிப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதில், கனடாவுக்கு 35 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்புகளை கனடா ஏற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடாவின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.