தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சாந்தி பிரியா. நடிகை பானுப் பிரியாவின் தங்கையான சாந்திப் பிரியா ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற படத்தில் ராமராஜனுடன் ‘செண்பகமே செண்பகமே’ என்ற பாடலில் நடித்திருந்தார். இந்த பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் பாடலாக இருந்து வருகிறது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாந்தி பிரியா 1992-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சித்தார்த் வங்காள தேசத்தை சேர்ந்தவர். சாந்தி பிரியாவும், சித்தார்த்தும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக நடனமாடிய போது முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
தொடர்ந்து இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு பெற்றோரானார்கள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களது குடும்ப வாழ்க்கை 2004-ம் ஆண்டு சித்தார்த்தின் திடீர் மரணத்தால் நிலை குலைந்து போனது. சினிமாவில் இருந்து பல வருடங்கள் ஒதுங்கி இருந்த சாந்தி பிரியா சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த 5-ந்தேதி வெளியான ‘பேட்கேர்ள்’ படத்தில் நடித்துள்ள சாந்திபிரியாவின் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் கணவர் மரணம் குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எங்கள் வீட்டு பணிப்பெண் மாடியில் வசிக்கும் மருத்துவரை அழைத்து வந்தார். அவர் சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினார். ஆனாலும் அவர் இறந்து விட்டார். நான் உறைந்து போயிருந்தேன். நான் அழவில்லை. நான் உதவியற்றவர் என்று காட்ட விரும்ப வில்லை.
நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. எல்லா சடங்குகளும் முடிந்த பிறகுதான் அவர் எங்களுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். என் அம்மா என்னை வீட்டிற்கு திரும்பி வரச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். அதிர்ச்சியில் இருந்தாலும் முகத்தை தைரியமாக வைத்திருந்தேன். நீண்ட காலமாக வெள்ளை நிற ஆடைகளை மட்டுமே அணிந்திருந்தேன். என் நிலையை பார்த்த எனது தாயார் மிகவும் மனமுடைந்தார். குழந்தைகளுக்காகவாவது வாழ வேண்டும் என கூறினர். என் வாழ்க்கை குழந்தைகளுக்காக மாறியது. இவ்வாறு அவர் கூறினார்.