கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், குழந்தைகள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷிலிருந்து மலேசியா நோக்கி பயணம் மேற்கொண்ட இழுவைப் படகு, பலத்த காற்று, சீற்றமான கடல் கொந்தளிப்பு மற்றும் அதிகப்படியான சன நெரிசல் காரணமாக மூழ்கியதாக ஐ.நா. அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் கடலோர காவற்படை, ஏப்ரல் 9ஆம் திகதி ஒரு கப்பல் மூலம் 9 பேரை மீட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. எனினும், விபத்து துல்லியமாக எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மியன்மார் நாட்டின் பல இன சிறுபான்மையினருள் ஒன்றான ரோஹிங்கியாக்கள், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற கடுமையான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் எல்லை தாண்டி பங்களாதேஷிற்கு தஞ்சம் புகுந்தனர். பெரும்பாலும் முஸ்லீம்களாக உள்ள இவர்களுக்கு, பௌத்த பெரும்பான்மையுடைய மியான்மர் அரசு குடியுரிமை வழங்காமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
பங்களாதேஷ் அகதி முகாம்களில் நிலவும் மோசமான வாழ்க்கைச் சூழ்நிலைகள், சிலரை மலேசியா போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பான வாழ்வு தேடி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுகின்றன.
உயிர் தப்பிய 40 வயதான ரஃபிகுல் இஸ்லாம், மீட்கப்படுவதற்கு முன்பு சுமார் 36 மணிநேரம் கடலில் மிதந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், படகில் இருந்து கசிய்ந்த எண்ணெயால் உடல் வெந்ததாகவும் கூறியுள்ளார். மலேசியாவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே தன்னை அந்தப் பயணத்திற்கு தூண்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யு.என்.எச்.சி. ஆர் (UNHCR ) மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (International Organization for Migration ) ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயரச் சம்பவம், நீண்டகால இடப்பெயர்வு மற்றும் நிலையான தீர்வுகள் இல்லாததன் கடுமையான விளைவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் ரக்கைன் மாநிலம் பகுதியில் நீடித்து வரும் வன்முறைகள் காரணமாக, ரோஹிங்கியாக்கள் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்பும் வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அகதி முகாம்களில் குறைந்து வரும் மனிதாபிமான உதவிகளும், சவாலான வாழ்க்கைச் சூழ்நிலைகளும் அவர்களை இத்தகைய ஆபத்தான முயற்சிகளுக்கு தள்ளுகின்றன.
“போர் மற்றும் வறுமை, பசி காரணமாக மக்கள் உயிரிழக்கின்றனர். அதனால் மெதுவாக உயிரிழப்பதற்குப் பதிலாக கடலில் இறப்பதே மேல் என சிலர் எண்ணுகின்றனர்,” என ரோஹிங்கியா அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், ரோஹிங்கியா அகதிகளுக்கான நீண்டகால தீர்வின் அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது. பங்களாதேஷில் உள்ள அகதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சமூகங்களுக்கும் நிதி உதவிகளைத் தொடர்ந்து வழங்குமாறு ஐ.நா. அமைப்புகள் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், மியான்மரில் இடப்பெயர்வுக்குக் காரணமான அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து, ரோஹிங்கியாக்கள் கண்ணியத்துடன் தாயகத்திற்கு திரும்புவதற்கான அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

