16.1 C
Scarborough

கச்சதீவை விரிவுப்படுத்தியவர் இந்திராகாந்தி – செல்வப்பெருந்தகை தெரிவிப்பு

Must read

1.75 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் நேற்று (23) 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்று காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து செல்வப் பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2014ஆம் ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவா் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாம்பனில் ‘கடல் தாமரை மாநாடு’ நடத்தப்பட்டது. அப்போது மோடி ஆட்சிக்கு வந்ததும் மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கைக் கடற்படையால் மீனவா்கள் கைது செய்யப்படுவது, அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சா்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டதுடன், அவா்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தடுக்க மத்திய பா.ஜ.க அரசு தவறிவிட்டது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது,1.75 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு பாக். ஜலசந்தி கடல் பகுதியில் 4 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு இந்திய கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டது. இதுதான் ராஜதந்திரம்.

 

ஆனால் மத்திய பா.ஜ.க அரசு, அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியையும், ஜம்மு- காஷ்மீரில் உள்ள லடாக்கின் ஒரு பகுதியையும் சீனாவிடம் பறிகொடுத்துவிட்டு கை கட்டி வேடிக்கை பாா்க்கிறது. இதுதான் மத்திய பா.ஜ.க அரசின் ராஜதந்திரமா? இந்திரா காந்தியை குறை கூறுபவா்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியுமா? வாஜ்பாய் பாராட்டைப் பெற்றவா்தான் இந்திரா காந்தி. இதை பா.ஜ.கவினா் மறுக்க முடியுமா?

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை பா.ஜ.க மாநிலத் தலைவா் அண்ணாமலைதான் விளக்க வேண்டுமென அவர் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article