பிரான்ட்ஃபோர்ட் — உணவு பொதிகளுக்கான உலோக டப்பாக்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான மாசிலி நார்த் அமெரிக்கா இன்க். (Massilly), ஒன்டாரியோவில் புதிய, அதிநவீன உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க 85 மில்லியன் டாலர் முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாக ஒன்டாரியோ அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த முதலீடு 228 தற்போதைய வேலைகளைத் தொடர்ச்சியாகக் காக்கவும், மேலும் 50 புதிய, உயர்ந்த ஊதியமுள்ள உற்பத்தித் துறை வேலைகளை உருவாக்கவும் உதவும். அதே நேரத்தில், முக்கிய விநியோகச் சங்கிலிகளை மீண்டும் ஒன்டாரியோவுக்கு கொண்டு வந்து (reshoring), இறக்குமதி செய்யப்பட்ட உலோகப் பொதிகளின் மீதான சார்பை நீக்குவதன் மூலம், உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் கனடிய உணவுத் துறையின் தன்னிறைவை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த முதலீடு அமைகிறது.
இந்த முதலீடு பிரான்ட்ஃபோர்டிலும் ஒன்டாரியோ முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. இது எங்கள் உற்பத்தி விநியோகச் சங்கிலி முழுவதும் நல்ல ஊதியமுள்ள வேலைகளை ஆதரிக்கும்,” என முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்தார். “ஜி7 நாடுகளிலேயே மிக வலிமையான, தாங்குத்திறன் மிக்க மற்றும் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் பாதையில், முதலீடுகளை ஈர்க்கவும் நல்ல வேலைகளை உருவாக்கவும் வரி சலுகைகள் மற்றும் தேவையற்ற நடைமுறைகளை குறைப்பதை எங்கள் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இதனால் ஒன்டாரியோவின் முழுமையான (end-to-end) விநியோகச் சங்கிலி வலுப்பெற்று முக்கிய துறைகள் தன்னிறைவும் தாங்குத்திறனும் பெறும் என முதல்வர் டக் ஃபோர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.


