தாய்நாட்டில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தக் கோரி, Ottawa வில் வசிக்கும் Venezuela மக்கள் சனிக்கிழமை அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, Venezuela அதிபர் Nicolás Maduro மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமெரிக்கா கைது செய்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தப் பேரணி நடைபெற்றது. அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்ய New York இற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
Ottawa-Gatineau பகுதியில் வாழும் புலம்பெயர் Venezuela மக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணியானது அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அடக்குமுறைகளை நிறுத்துதல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் Venezuela ஜனநாயகத்திற்கான அமைதியான மாற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
கனடாவில் வசிக்கும் பல Venezuela மக்கள் Maduro வின் பதவி நீக்கத்தை வரவேற்று மகிழ்வதோடு, தென் அமெரிக்க நாடான Venezuela வில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான சரியான தருணம் இதுவென்றும் கூறுகின்றனர்.
”சுதந்திரமான Venezuela வைப் பற்றிய எங்களது பார்வையை வெளிப்படுத்தவும், கடந்த 27 ஆண்டுகளாக நிலவி வரும் சர்வாதிகாரம் மற்றும் நாங்கள் அனுபவித்த அடக்குமுறைகள் குறித்த உண்மைகளை உலகிற்குச் சொல்லவும் நாங்கள் இங்கு கூடியுள்ளோம்,” என்று United for Venezuela பேரணியின் ஒருங்கிணைப்பாளர் Victoria Ramirez தெரிவித்தார்.

