அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்காக, அகமதாபாத் வந்தடைந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை தாம் பராமரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்த போயிங் விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டதாக சில குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்தன.
இப்பிரச்சனையில், போயிங்கின் பராமரிப்பு உரிமை கோரலை துருக்கி நிறுவனம் நிராகரித்துள்ளது. மேலும், இதற்காக, இந்தியா வந்த துருக்கியின் விபத்து புலனாய்வு பணியகக் குழுவினர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விபத்துக்குள்ளான போயிங் 787-8 வகை விமானம் துருக்கி தொழில்நுட்பக் குழுவால் பராமரிக்கப்பட்டது என்று கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல.
இந்த கருத்துக்கள், துருக்கி – இந்திய நாடுகளின் நல்லுறவை பாதிக்கும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் துருக்கி விமான தொழில்நுட்பக் குழுவின் இடையே 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் பி777 வகை விமானங்களின் பரந்த உடற்பகுதிகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் எங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.