14.6 C
Scarborough

உளவுத்துறை ரகசியம் கசிவு – அதிருப்தியில் ட்ரம்ப்!

Must read

உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கவில்லை என்பதை பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் ரகசிய உளவுத்துறை அறிக்கை வெளிப்படுத்தியதை அடுத்த இந்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை பல மாதங்கள் ஒத்தி வைத்துள்ளதாக இந்த புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை மறுத்திருந்தது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக” அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உளவுத்துறை அறிக்கை வெளியானது குறித்து அமெரிக்க ஊடகங்களையும் அவற்றின் அறிக்கையையும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றான இந்தத் தாக்குதலை அழிக்கும் முயற்சியில் தோல்வியுற்ற ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்த ரகசிய உளவுத்துறை அறிக்கையை வெளியிடுவது “தேசத்துரோகச் செயல்” என்று அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் கூறியுள்ளார்.

“இது மிகைப்படுத்தப்பட்டதாகும், இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கவில்லை என்பதை வெளிப்படுத்திய உளவுத்துறை அறிக்கையையும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

இந்த உளவுத்துறை அறிக்கை ஜனாதிபதி டிரம்பை இழிவுபடுத்தும் ஒரு தெளிவான முயற்சி என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் தயாரித்த ஒரு உளவுத்துறை அறிக்கை, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை பல மாதங்கள் மட்டுமே ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தாக்குதலின் ஆரம்ப சேத மதிப்பீடு குறித்த தகவல்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, சர்வதேச ஊடகங்களால் வெளியிடப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த வார இறுதியில் அமெரிக்கா மூன்று ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஒரு பாரிய தாக்குதலை நடத்தியது. 200 அடி நிலத்தடியில் கான்கிரீட்டை ஊடுருவக்கூடிய “பதுங்கு குழியை அழிக்கும்” குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இருப்பினும், ஈரான் செறிவூட்டிய யுரேனியம் கையிருப்பின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்பே அகற்றப்பட்டதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article