இந்த வாரம் அல்பட்ராவின் Banff நகரில் நடைபெறவுள்ள மூன்றுநாள் உச்சி மாநாட்டில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் யுத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் பிரதான விடயங்களாக ஆராயப்படவுள்ளன.
இந்த உச்சிாமாநாடு அடுத்த மாதம் 15 ஆந் திகதி தொடக்கம் 17 ஆந் திகதி வரை அல்பட்ராவின் கெனஸ்கிஸ் நகரில் நடைபெறவுள்ள G7 தலைவர்களுக்கான உச்சிமாநாட்டின் முன்னோடியாக அமையும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சரவதேச அமைப்பின் தலைவர்களும் Banff மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வரி விதிப்புகள் மூலம் அமெரிக்காவிற்குள் தொழில் துறையை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வரும் நிலையில் பல நாடுகள் அமெரிக்காவுடனான வர்த்தக உறவு குறித்து மறுபரிசீலனை செய்து வருகின்றன. அந்தவகையில், இந்தச் சந்திப்பு பல நாடுகள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த உச்சி மாநாட்டிற்கு அமெரிக்கா சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தொடர்பில் இதுவரை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு இத்தாலியில் ரஸ்யாவின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கும், உக்ரைனிற்கு நிதி உதவி வழங்குவதற்கு அவற்றை திருப்பிவிடுவதற்கும் தலைவர்கள் உறுதியளித்தனர். உக்ரைன் G7 இல் உறுப்பினராக இல்லாவிட்டாலும் நிதி அமைச்சர் செர்கி மேர்சன்கோ கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்.
ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதை இடைநிறுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் உதவித்திட்டம் தொடர வேண்டுமாயின் ஒரு முக்கியமான கனியவள ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
ரஸ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான கடந்தவார நேரடிப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தாலும் இரு நாடுகளும் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள உறுதியளித்துள்ளன.